Source : hindutamil | Dated : Nov 20, 2024
சென்னை: சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு அஸ்திவாரத் தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும்.
இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் – போரூர் சந்திப்பு நிலையத்துக்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் அஸ்திவாரத் தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
இப்பணிகளை வெற்றிகரமாக முடித்த ஊழியர்கள், அதிகாரிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் எஸ்.அசோக் குமார் பாராட்டினர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இப்பணி நிறைவடைந்ததன் மூலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த உயர்மட்ட வழித்தடம் 8 கி.மீ. தொலைவுக்கு 4 இரட்டை அடுக்கு நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு நிலையங்களை கொண்டது. இவற்றின் கட்டமைப்பு மற்றும் வழித்தட தூண்களை தாங்கும் வகையில் தரையின் கீழ் 2,255 அஸ்திவாரத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டக் குழுவும் ஒப்பந்ததாரர்களும் பல சவால்களை எதிர்கொண்டனர். இதில் குறிப்பாக 24.45 கி.மீ. தொலைவுக்கு பொது பயன்பாட்டில் உள்ள உயர் மின் விநியோக கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைத் தொடர்பு கேபிள்கள், மழைநீர் வடிகால் போன்றவற்றை மாற்று வழியில் செயல்படுத்துதல் மற்றும் நீர்வழிப் பாதையை மறுவடிவமைப்பு செய்தல், மாற்றி வழியில் செயல்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.