Source : goodreturns | Dated : Nov 24, 2024
சென்னை அருகே திருமழிசை சாட்டிலைட் நகரத்திற்கு சாலை இணைப்புகளை வழங்குவதற்காக 300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த இருப்பதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சென்னையை சுற்றியுள்ள திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் ஆகிய நகரங்களை சாட்டிலைட் நகரங்களாக மேம்படுத்துவது என அறிவிப்பு வெளியிட்டது. டெல்லியை சுற்றி எப்படி நொய்டா, என்சிஆர் ஆகியவை நகரத்துக்கான இணையான வளர்ச்சியை பெற்றுள்ளனவோ அதே போல தான் இந்த 6 நகரங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. சென்னைக்கு துணை நகரங்களாக இவை செயல்படும்.
அதிநவீன வசதிகள் சென்னையுடன் எளிதான சாலை இணைப்பு ஆகியவற்றை கொண்டதாக இவை உருவாக்கப்பட உள்ளன. இதற்காக நிலம் சேகரிப்பு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அரசின் நிலம் சேகரிப்பு திட்டத்தின் வாயிலாக திருமழிசை நியூ டவுன் பகுதியில் சாலை வசதிகளை மேம்படுத்த 330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த இருப்பதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கூறியுள்ளது. இதற்காக மாநில அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
15 வது நிதி குழுவின் நிதி உதவியின் பேரில் இந்த சாட்டிலைட் நகரமானது உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக 8,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருமழிசை நியூ டவுன் பகுதியில் லூப் சாலைகள் மற்றும் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான மையங்கள் அமைப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த திருமழிசை நியூ டவுன் பகுதிக்கு என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வழங்கும் பொறுப்பு ஒரு நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
சாட்டிலைட் நகரங்களுக்காகவே தமிழக அரசு அண்மையில் நிலம் சேகரிப்பு திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. தனிநபர்கள் மற்றும் ஒரு குழுக்களிடமிருந்து மொத்தமாக நிலங்களை கையகப்படுத்தி அரசின் மேம்பாட்டு திட்டங்களுக்காக பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் இந்த நகரங்களை கட்டமைப்பதே அரசின் இலக்கு. பெரிய சாலைகள், நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை இங்கே அமைக்கப்படும்.
புதிய நிறுவனங்கள், முதலீடுகள் ஆகியவை ஈர்க்கப்படும் என்றும் ஸ்மார்ட் சிட்டி அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கூறுகிறது.